தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை அதன் நான்கு மொழிகளில் கன்னட திரையுலகம் மட்டுமே வியாபார ரீதியாக ரொம்பவே பின்தங்கி இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் படத்தின் பிரம்மாண்டமும் அதற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியும் கன்னட சினிமாவின் வியாபார எல்லையை விசாலமாக திறந்து விட்டது.
அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் கன்னட ஹீரோ யஷ் என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் கூட இதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இதன் முதல் பாகத்தை பார்த்து யஷ்ஷின் தீவிர ரசிகர்களாக மாறிய பலபேர் தற்போது கேஜிஎப் 2 வெளியாகியுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
அதாவது யஷ்ஷின் உருவப்படம் கொண்ட மொசைக் போஸ்டரை சுமார் 25,000 சதுர அடியில் வடிவமைத்து உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட பத்து கிரவுண்டு வீடுகட்டும் நிலப்பரப்பில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் இது உண்மையிலேயே பிரமிப்பான விஷயம் தான்.
யஷ்ஷின் ரசிகர்கள் இந்த அளவிற்கு தீவிரமாக தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள் என அவரே நினைத்தும் பார்த்திருக்க மாட்டார். இந்த போஸ்டருடன் கூடிய வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் யஷ்.