திரையுலகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள மூன்று பேர் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட கின்னஸ் சாதனை போன்றதுதான். தெலுங்கில் நாகார்ஜுனா தனது தந்தை மகன் ஆகியோருடன் இணைந்து அப்படி ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அதன்பிறகு தமிழில் நடிகர் விஜயகுமார் குடும்பத்திலிருந்து அவரது மகன் அருண்விஜய் பேரன் ஆர்ணவ் விஜய் மூவரும் இணைந்து ஓ மை டாக் என்கிற படத்தில் நடித்துள்ளனர்.

சரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் இந்த படம் ரிலீசாகிறது இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக்குழுவினர் இந்த படம் குறித்த தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்

இந்த படத்தில் கண்டிப்பான ஒரு தாத்தாவாக நடித்துள்ளாராம் நடிகர் விஜயகுமார். அது மட்டுமல்ல அவரது பேரன் ஆர்ணவ் தனது நண்பர்களிடம் இந்த படத்தில் நான்தான் மெயின், எங்க அப்பாவும் தாத்தாவும் சைடு தான் அதாவது அவர்கள் இருவரும் துணை நடிகர்கள் தான் என ஜாலியாக கூறுவது வழக்கமாம்.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜசேகர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை உருவாக்கி இதை தயாரித்து முடிப்பதற்குள் ஐந்து வருட காலம் ஓடிவிட்டது. கிட்டத்தட்ட நூறு நாய்களுக்கு இரண்டு வருட காலம் பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளோம்.

நாய் கண்காட்சியில் படப்பிடிப்பை நடத்துவதற்கும் அதேபோல இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக அனுமதிக் கடிதம் பெற்று அவற்றை முறைப்படி செய்ததால்தான் இவ்வளவு நாட்கள் தாமதம் ஆகிவிட்டது” என்று கூறினார்.