கும்கி படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபுவுக்கு முதல்படமே பெயர் சொல்லும்படி நல்ல அறிமுகம் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அவர் நடித்த அரிமா நம்பி அவருக்கு ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் அதைத் தொடர்ந்து வெளியான படங்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்து தூக்கி விடவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த நிலையில்தான் தற்போது தமிழ்மாறன் இயக்கத்தில் வெளியான டாணாக்காரன் படம் விக்ரம் பிரபுவின் நடிப்பை பறைசாற்றும் விதமாக அவருக்கு மீண்டும் பெயர் தேடி கொடுத்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரமாகவே மாறி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல கதையும் அதில் நடித்திருந்த அனைவருமே படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை ரசிகர்களை ஒரு வித படபடப்போடு படம் பார்க்க வைத்திருந்தனர்.
இப்படிப்பட்ட ஒரு படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிடித்துப் போனதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. அதனால் தான் படம் பார்த்த உடனேயே விக்ரம் பிரபுவை போனில் அழைத்து அவரை பாராட்டி தள்ளிவிட்டார்.
எதிர்பாராத இடத்திலிருந்து இப்படி ஒரு பாராட்டு தேடி வந்ததும் ஸ்தம்பித்து போன விக்ரம் பிரபு, “நான் கனவில் கூட நினைத்திராத ஏதோ ஒன்றை சாதித்த உணர்வு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாராட்டைப் கேட்ட பிறகு எனக்குத் தோன்றுகிறது” என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார்.