இந்தியா கைது செய்து வைத்திருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதி தலைவன் ஒருவனை விடுவிக்கும்படி மிரட்டல் விடுத்து சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தை ஹைஜாக் செய்கிறான் தீவிரவாதியின் தம்பி. இதற்கு மத்திய மந்திரி ஒருவரும் உடந்தை.. ஆனால் இவர்கள் எதிர்பாராத விதமாக அந்த மாலில் சிக்கிக்கொண்டவர்களில் உளவுத்துறை அதிகாரியான விஜய்யும் இருக்கிறார். அவர் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை எப்படி மீட்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
விஜய் நாளுக்கு நாள் இன்னும் இளைஞராக மாறிக்கொண்டே போகிறாரே என்பதுபோல நடன காட்சியிலும் சண்டைக்காட்சிகளிலும் அப்படி ஒரு வேகம்.. பிரமிக்க வைக்கிறார். சீரியசான சூழல்களில் கூட ஒன்லைன் காமெடியிலும் அசத்துகிறார்.
நாயகனுக்கு உதவும் நாயகி கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே ரொம்பவே அழகாக பொருந்துகிறார். குறிப்பாக அரபிக்குத்து பாடலில் விஜய்யுடன் இணைந்து செமத்தியான ஆட்டமும் போட்டு ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் பூஜா.
இதுநாள்வரை இயக்குனராக வலம்வந்த செல்வராகவனை இதில் முதன்முறையாக நடிகராக பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நடிப்பில் பாஸ்மார்க்கை தாண்டி இன்னும் அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார். காமெடியும் ஓரளவுக்கு இயல்பாகவே வருகிறது. வில்லனாக அங்கூர் விகால்.. பாதி காட்சிகளில் முகமூடி அணிந்தபடியே முகம் காட்டாமல் நடித்துள்ளார்.. விஜய் யார் என்பதை அறிந்துகொள்வதற்காக கூட்டத்தில் ஒருவனாக அப்பாவியாக வரும் காட்சியில் அட என ஆச்சர்யப்படுத்துகிறார்.
யோகிபாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என மூன்று பேர் இருந்தாலும் இவர்களில் விடிவி கணேஷ் தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.. பூஜாவின் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக வந்து காமெடி என்கிற பெயரில் கிச்சு கிச்சு மூட்டுகிறார் நடன இயக்குனர் சதீஷ். அமைச்சராக வரும் சாஜி சென் கொஞ்சம் மிகையான நடிப்பையே வழங்கியுள்ளார். ஒருகட்டத்தில் அது அலுப்பை ஏற்படுத்துகிறது.
மாலுக்குள் நடக்கும் காட்சிகளாகட்டும் காஷ்மீர் எல்லையில் நடக்கும் காட்சிகளாகட்டும் அவற்றை படமாக்கிய விதத்தில் மனோஜ் பரமஹம்சாவின் கேமரா ஓய்வில்லாமல் பரபரப்பாக சுழன்றுள்ளது. பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலுமே தன் பங்கு வேலையை சிறப்பாக செய்துள்ளார் அனிருத்.
விஜய் போன்ற சிறுத்தையை கூட்டுக்குள் அடக்கி வைத்தது போல இரண்டு மணி நேரம் ஒரு ஷாப்பிங் மாலுக்குள்ளேயே வைத்து படத்தை முடித்துள்ளார் இயக்குனர் நெல்சன்.. இருந்தாலும் அதை ஓரளவு விறுவிறுப்பாகவே கொடுத்திருக்கிறார். பல பேர் சுட்டாலும் ஹீரோ மேல் ஒரு குண்டு கூட படாதது, தீவிரவாதிக்கு உடந்தையான மத்திய மந்திரி என் ஏற்கனவே பார்த்து சலித்த சில கிளிஷேக்களை நெல்சன் கொஞ்சம் வேறு மாதிரி கையாண்டு இருக்கலாம்..
படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே தியேட்டருக்குள் இருப்பதை மறந்து ஷாப்பிங் மாலுக்குள் இருப்பதாக உங்களுக்குள் ஒரு உணர்வு தோன்றினால் அதுதான் இந்தப்படத்திற்கான வெற்றி. .