கடந்த சில வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கேஜிஎஃப் யஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் கேஜிஎஃப் 2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது.. வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தப்படம் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்காக பல வருடங்களாக தனது அர்ப்பணிப்பை கொடுத்து வருகிறார் நடிகர் யஷ். தமிழகத்தில் இந்தப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார்.

இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இதில் யஷ் பேசும்போது, “கேஜிஎப்-2வை பொருத்தவரை ஒவ்வொரு மொழிக்குரிய முக்கியத்துவத்தையும் அளித்திருக்கிறோம்.. ஏனெனில் மொழி என்பது மதிப்புமிக்கது. அதற்குரிய மரியாதையை தரவேண்டும்.. ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதற்கான மரியாதையை வழங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு மொழிக்கேற்ற வகையில், அதன் நேட்டிவிட்டி மாறாமல் வசனங்களை எழுதியிருக்கிறார்கள்.. இதற்காக வசனகர்த்தாக்களுக்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சேகர் என்ற கலைஞர் எனக்காக தமிழில் பின்னணி பேசி இருக்கிறார் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..

முதல் பாகத்திலேயே நான் தமிழில் பின்னணி பேச முயற்சித்தேன்.. ஆனால் முழுமையான தன்னம்பிக்கை இல்லாததால் பேசவில்லை.. இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறினார். இந்த படத்திற்கான வசனங்களை அசோக் எழுதியுள்ளார். படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் வசனங்கள் இன்னும் கூர்மையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

























