பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ஒரு கூட்டம் அந்த படம், இந்த படத்தின் காப்பி, அந்த ஹாலிவுட் படத்தின் காப்பி என தங்களுக்கு தோன்றியவற்றை விஷமத்தனமாக பரப்பும் போக்கு அதிகமாகி வருகிறது. குறிப்பாக விஜய் நடிக்கும் படங்கள் மீது தொடர்ந்து இதுபோன்று விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. நகரத்தின் மிகப்பெரிய மால் ஒன்றில் தீவிரவாதிகள் சிலர் பொதுமக்களை பணய கைதிகளாக அச்சுறுத்தி மிரட்டுவது போன்றும் விஜய் அவர்களை மீட்பது போன்றும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன.
இதைத்தொடர்ந்து இந்த படம் ஏற்கனவே யோகிபாபு நடித்த கூர்க்கா மற்றும் இன்னும் ஒரு சில படங்களின் காப்பி என்பது போன்று விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
தற்போது ஒரு பேட்டியின்போது இதுகுறித்து இயக்குனர் நெல்சனிடம் கேட்டபோது, “பொதுமக்கள் அதிகமாக நடமாடும் ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிது இல்லை. பல படங்கள் இப்படி வந்திருக்கின்றன. நாம் எந்த விதத்தில் அதை காட்சிப்படுத்துகிறோம்.. எப்படி ரசிகர்களுக்கு கொடுக்கிறோம் என்பதில்தான் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கும்.
ஏற்கனவே வந்த படங்களில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகள் போல மீண்டும் வருவது தவிர்க்கமுடியாது. கூர்க்கா படத்தை நானும் பார்த்திருக்கிறேன்.. அதற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
என்னுடைய படங்களை பொறுத்தவரை டிரெய்லர்கள் ஒரு மாதிரியாகவும் படங்களை பார்க்கும்போது வேறு மாதிரியாகவும் இருக்கும் அதனால் ட்ரெய்லரில் வரும் காட்சிகளை வைத்து இதுதான் படம் என்றோ, இந்த படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்றோ என எந்த முடிவையும் எடுக்க தேவை இல்லை” என்று கூறியுள்ளார்