கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக நடிகர், இயக்குனர் என இரண்டு துறைகளிலும் அசைக்கமுடியாத ஒரு இடத்தில் வலம் வருகிறார் நடிகர் பார்த்திபன். அவருக்குப் பின்னர் நடிகர்களாக, இயக்குனர்களாக மாறிய பலரும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒதுங்கி கொள்ள இவர் மட்டும் பந்தய குதிரையாக இன்னும் ஓடிக் கொண்டிருக்க காரணம் அவரிடம் உள்ள தனித்தன்மை தான்.
எந்த விஷயம் செய்தாலும் அதை வித்தியாசப்படுத்தி காட்டும் பார்த்திபன் ஒத்த செருப்பு என்கிற படத்தில் தனி ஒரு ஆளாக நடித்து அந்த படத்திற்கு தேசிய விருதும் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளது சர்வதேச அளவிற்கு இந்த படத்தை எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏ.ஆர் ரகுமானுக்கு எடுக்கும் விழாவாக கொண்டாட தீர்மானித்துள்ளார் பார்த்திபன். வரும் மே 1ம் தேதி இந்த விழா நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த விழா குறித்து திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்
அதில் அவர் கூறும்போது, “தமிழ் சினிமாவை உலகெங்கிலும் கொண்டுசெல்லும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும் ஆர் பார்த்திபனும் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தை நானும் பார்த்தேன். இந்தப் படைப்பின் இசை நாயகனின் பயணத்தை கொண்டாடும் விதமாக மே 1ம் தேதி தீவுத்திடலில் விழா நடக்கிறது.
இதில் திரையுலக சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு இதை நம் குடும்ப விழாவாக சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.