90களில் சாக்லேட் ஹீரோ என சொல்லப்படும் அளவுக்கு ரசிகைகள் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்தவர் நடிகர் பிரசாந்த். விஜய், அஜித் இருவரும் சினிமாவுக்கு வரும் முன்பே வைகாசி பொறந்தாச்சு என்கிற படம் மூலம் வெற்றிப்பட கதாநாயகனாக அறிமுகமான பிரசாந்த் அதன்பிறகு ஆர்கே செல்வமணி, மணிரத்னம், ஷங்கர் என பிரம்மாண்டமான படங்களை இயக்கும் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்த ஒரே நடிகர் என்கிற பெயரையும் பெற்றவர்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர் தன்னுடைய இடத்தை தக்கவைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு படம் என நடித்து தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியில் வெளியாகி ஹிட்டான அந்தாதுன் என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரசாந்த்.
இந்த படத்தை அவரது தந்தை தியாகராஜனே தயாரிப்பதுடன் அவரே இயக்கியும் வருகிறார். விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது இந்த நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகர் பிரசாந்த்.
தமிழ் சினிமாவில் பிரசாந்த்துக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த செம்பருத்தி என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.கே செல்வமணியையும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.
அப்போது பேசிய இயக்குனர் ஆர்.கே செல்வமணி, “பிரசாந்த் ஒரு ஹீரோ என்கிற நிலையில் மட்டும் நிற்காமல் நடிகர் என்கிற நிலைக்கு மாறி வில்லன் மற்றும் எதிர்மறை கலந்த கதாபாத்திரங்களில் நடித்தால் அவருக்கு இன்னும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். இப்போதெல்லாம் மக்கள் ஹீரோ, வில்லன் என பிரித்துப் பார்ப்பதில்லை. சிறந்த நடிகர் என்பதையே பார்க்கிறார்கள்” என பிரசாந்த்திடம் ஒரு கோரிக்கையையும் வைத்தார். வருங்காலத்தில் இந்த கோரிக்கையை பிரசாத் நிறைவேற்றுவாரா இல்லை புறக்கணிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.