மாயா, மாநகரம், மான்ஸ்டர் என தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் நிறுவனம், தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் தயாரித்துள்ள படம் டாணாக்காரன்.
இதுவரை காவல்துறையை பற்றி வந்த படங்கள் அனைத்தும் ஹீரோக்கள் போலீஸான பின்னர் என்ன செய்கிறார்கள், போலீஸ் ஆவதற்கு என்ன செய்கிறார்கள் என்பதை பற்றியதாகத்தான் வெளியாகி வந்தன. ஆனால் போலீசாருக்கான பயிற்சிகளின்போது என்னவிதமான அரசியல் நடக்கிறது என்பதை பற்றி விலாவாரியாக சொல்லும் விதமாக படங்கள் வெளியானது இல்லை. அந்த குறையை போக்கும் விதமாக இந்த டாணாக்காரன் படம் உருவாகி உள்ளது
இந்தப்படத்தை தமிழ் இயக்கியுள்ளார். இவர் வேறு யாருமல்ல.. ஜெய்பீம் படத்தில் மிரட்டல் போலீஸ் அதிகாரி குருமூர்த்தி ஆக நடித்தாரே, அவர்தான்.. இந்த படத்தில் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்க மிக முக்கியமான வேடங்களில் நடிகர் லால், மதுசூதன ராவ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
படத்தின் டிரைலரை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் புதிதாக இருக்கும் என்றும் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் புது அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும் என்றும் தோன்றுகிறது.. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களும் கூட இதே கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இந்தப் படம் தியேட்டருக்கு வந்தால் இன்னும் நன்றாக இருக்குமே, எதற்காக ஓடிடியில் வெளியிடுகிறார்கள் என்று கூட தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. இதற்கு முன்னதாக விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி என்கிற படம் ஜனவரி மாதம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது குறிப்பிடத்தக்கது..