கடந்த சில வருடமாகவே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரை உலகில் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை பான் இந்தியா என்பதாகத்தான் இருக்கும். தெலுங்கு, தமிழ் எந்த மொழியில் உருவானாலும் அவற்றை தென்னிந்திய மொழிகள் நான்கு மற்றும் இந்தியையும் சேர்த்து ஐந்து மொழிகளிலும் சேர்த்து வெளியிடும் பான் இந்தியா ரிலீஸ் கலாச்சாரம் வெகுவாக பரவி வருகிறது.
இதில் தெலுங்கு திரையுலகினர் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பாகுபலி படம் மூலமாக துவங்கிய இந்த பான் இந்திய ரிலீஸ், பிரபாஸ், தற்போது ஆர்ஆர்ஆர் படம் மூலமாக ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை பான் இந்திய ஹீரோக்களாக மாற்றியுள்ளது.
இந்தநிலையில் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ரவிதேஜாவும் பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ளார் அவர் அடுத்து நடிக்க உள்ள டைகர் நாகேஸ்வரராவ் என்கிற படமும் மேற்கூறிய ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
டைகர்’ நாகேஸ்வரராவ் 1970களில் தென்னிந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட மோசமான மற்றும் துணிச்சல் மிக்க திருடன். இவன் வசித்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை வம்சி இயக்குகிறார் இதில் இன்னொரு ஸ்பெஷல் அம்சம் என்னவென்றால் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீரி ஃபைல்ஸ் என்கிற படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.