நெல்சன் திலீப்குமார் திரையுலகில் தனது முதல் படம் வெளியான நாளில் இருந்தே குறுகிய காலகட்டத்தில் அடுத்தடுத்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அட்டகத்தி, மெட்ராஸ் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி மற்றும் காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்குகின்ற மிகப்பெரிய பொக்கிஷமான வாய்ப்பு கிடைத்தது.
அவருக்கு முன்னதாக திரையுலகில் காலூன்றிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கூட அதன்பிறகுதான் சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சமீபத்திய ஆச்சரியமாக தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிவரும் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் அவரது 169 வது படத்தை இயக்க இருக்கிறார்.
இதற்கு முன்னதாக யோகிபாபு, நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கினார். அப்படியே விஜய் படம், அதை அடுத்து எப்போதும் தமிழ் சினிமாவின் இயக்குனர்களின் உச்சபட்ச கனவான சூப்பர்ஸ்டார் ரஜினி படம் என்கிற இலக்கையும் தொட்டுள்ளார்.
இந்த நிலையில் நெல்சன் திலீப்குமாரை சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து கதை சொல்லும்படி உற்சாகப்படுத்தியதே தளபதி விஜய் தான் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நெல்சன் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தபோதே விஜய் ஒரு நாள் என்னை அழைத்து ரஜினி சாருக்காக நீங்கள் ஒரு கதை தயார் செய்யுங்கள்.. இதுதான் சரியான நேரம் என்று கூறினார்.
ஆனாலும் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. இருந்தாலும் என்னை உற்சாகப்படுத்தி அவருக்காக ஒரு கதையை தயார் செய்ய வைத்தார். அவர் சொன்னபடியே அந்த வாய்ப்பும் எனக்கு கிடைத்து விட்டது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.