திரையுலகில் தனது 9௦ வயதிலும் தொடர்ந்து நடித்து வருபவர் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி. அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது இன்று வழங்கி கவுரவித்துள்ளது..
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/03/sowcar-janaki-3.jpg)
கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என நான்கு முதல்வர்களுடன் பயணித்த இவர், அதில் மூன்று முதல்வர்களுடன் சினிமாவில் நடித்தவர் என்கிற பெருமைக்கும் உரியவர்.
70 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி, குணசித்திர கதாபாத்திரம், என தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக திரை உலகில் பதிய வைத்தவர் சௌகார் ஜானகி.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/03/sowcar-janaki-4-1024x576.jpg)
திருமணம் முடிந்துவிட்டால் கதாநாயகி வேடத்துக்கு லாயக்கில்லை என ஒதுக்கும் இந்திய சினிமாவில் திருமணமாகி குழந்தை பிறந்தபின் வறுமை காரணமாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்து கதாநாயகியாக வெற்றிக்கொடி நாட்டியவர் தான் நடிகை சௌகார் ஜானகி.
1947 ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் நடிகர் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானதால் அப்போதிருந்தே சௌகார் ஜானகி என்கிற பெயரே நிலைத்து நின்றுவிட்டது.. திரையுலகில் தைரியமான, யதார்த்த நடிகை என பெயரெடுத்து 70 ஆண்டுகாலமாக நடித்துவரும் நடிகை இவருக்கு இந்த விருது தாமதமாகவே வழங்கப்படுகிறது என்றாலும் இப்போதாவது மத்திய அரசு அதை வழங்கி கவுரவித்துள்ளதை பாராட்டுவோம்.