V4UMEDIA
HomeReviewஆர் ஆர் ஆர் ; விமர்சனம்

ஆர் ஆர் ஆர் ; விமர்சனம்

பாகுபலி படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து மீண்டும் ஆர்ஆர்ஆர் என்கிற ஒரு பிரமாண்டமான படத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் ராஜமவுலி.. பாகுபலி செய்த அதே மாயாஜாலத்தை இந்த படமும் நிகழ்த்தி உள்ளதா.? பார்க்கலாம்..

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. கிராமத்தில் உள்ள மல்லி என்கிற சிறுமியை ஆங்கிலேய கவர்னன்ர் ஒருவரின் மனைவி ஒருவர் கட்டாயப்படுத்தி தனது அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அந்த சிறுமியை மீட்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த இளைஞன் ஜூனியர் என்டிஆர் டெல்லிக்கு வந்து முகாமிட்டு சிறுமியை தேடுகிறார்.

இப்படி ஒரு ஆள் வந்து இருக்கிறார் என்கிற தகவல் கவர்னருக்கு தெரியப்படுத்தப்படுகிறது,.. அந்த ஆளை தேடி கண்டுபிடித்து பிடிக்கும் நபருக்கு போலீசில் சிறப்பு பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஆங்கிலேய ராணுவத்தில் வேலை பார்க்கும் ராம்சரணுக்கு தனது திறமையை நிரூபித்து மிகப்பெரிய பதவியை அடைய வேண்டும் என்பது லட்சியம்.

அப்படிப்பட்டவர் ஜூனியர் என்டிஆரை தேடி கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவர் யார் என தெரியாமலேயே அவருடைய நண்பராகவும் மாறுகிறார். அதேபோல தன்னை பிடிக்க வந்தவர்தான் ராம்சரண் என தெரியாமல் ஜூனியர் என்டிஆர் அவருடன் நட்பு பாராட்டுகிறார்.

மல்லியை மீட்கும் நேரம் நெருங்கி வந்த சமயத்தில் இந்த உண்மை தெரியவந்ததும் ஒரு போலீஸ் அதிகாரியாக மாறி ஜூனியர் என்டிஆரை தடுத்து நிறுத்தும் கடமையை செய்கிறார் ராம்சரண். அதன்பிறகு ஜூனியர் என்டிஆரால் மல்லியை மீட்க முடிந்ததா ? ராம்சரண் நண்பனுக்கே துரோகம் செய்யும் வகையில் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியதன் பின்னணி என்ன என்பதற்கெல்லாம் மீதி படம் விடை சொல்கிறது.

ஆந்திராவைச் சேர்ந்த அல்லூரி சீதாராம ராவ் மற்றும் கொமரம் பீம் என்கிற இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை இந்த கதையின் நாயகர்களாக உருமாற்றி உள்ளார் இயக்குனர் ராஜமௌலி. அப்பாவியான அதேசமயம் ஆக்ரோசமான மலைவாசி இளைஞனாக ஜூனியர் என்டிஆர், ஆங்கிலேய படைவீரனாக தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வாய்ப்புக்காக ஏங்கி காத்துக்கிடக்கும் துடிப்புமிக்க இளைஞராக ராம்சரணும் என இரண்டு பேருமே மிகப்பொருத்தமான தேர்வு. நடனம், சண்டைக்காட்சி என அனைத்திலுமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என வேகம் காட்டி பிரமிக்க வைக்கிறார்கள்.

ஆற்றில் தத்தளிக்கும் சிறுவனை இருவரும் இணைந்து மீட்கும் முயற்சி ஆகட்டும், அதன்பின்பு ஜூனியர் என்டிஆரை தப்பவிடாமல் தடுத்து நிறுத்த மோதுவது ஆகட்டும், ராம்சரணின் நடிப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்றே சொல்லலாம்.

சிறையில் அடைக்கப்பட்டாலும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்காத மாவீரனாக ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்கிற நிஜத்தை நம் கண்கள் முன்னாடி நிறுத்துகிறது ஜூனியர் என்டிஆரின் நடிப்பு.

மொத்த படத்தை இந்த இருவருமே தங்கள் தோளில் தாங்கிக் கொள்வதால் கதாநாயகிகளாக ஆலியா பட், ஒலிவியா மோரிஸ் ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் வேலை இல்லை.. இருந்தாலும் இருவரும் நிறைவான பங்களிப்பைத் தந்துள்ளனர்.. அதிலும் பெரியம்மை போட்டிருப்பதாக கூறி ஆங்கிலேய வீரர்களை ஆலியா பட் விரட்டும் காட்சி செம சர்ப்ரைஸ்.

கிராமத்து எளிய மக்களுக்குள் சுதந்திர விதையை விதைத்து அவர்களை போராட்டத்துக்கு தயார்படுத்தும் ஒரு அருமையான தலைவன் கதாபாத்திரத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் அஜய்தேவ்கன் சிலிர்க்க வைக்கிறார். அவரது மனைவியாக ஸ்ரேயாவும் தன் கடமையை சரியாக செய்திருக்கிறார்..  

இவர்கள் தவிர வெள்ளைக்கார கவர்னராக வரும் ரே ஸ்டீவன்சன் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளார்.. அதிலும் இந்தியர்களை கொல்வதற்காக ஒரு துப்பாக்கி தோட்டாவை வீணாக்கக் கூடாது என அவர் சொல்லும் விளக்கம் நமக்கே கோபம் வர வைப்பதாக இருக்கும் அளவுக்கு அவரது நடிப்பு பிரமாதம். ராம்சரணின் மாமாவாக பக்கபலமான கதாபாத்திரத்தில் சமுத்திரகனியும் மிளிர்கிறார்.

அதேபோல ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நாட்டுக்கூத்து பாடலை சரியான இடத்தில் இணைத்து ரசிகர்களை உற்சாகமான ஆட்டம் போட வைத்திருக்கிறார்கள். படத்திற்கு பின்னணி இசையில் மிகப்பெரிய அளவில் வலு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் மரகதமணி. ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரும் தன் பங்கிற்கு உயிரை கொடுத்து காட்சிகளை உயிர்ப்புடன் படமாக்கியிருக்கிறார்.

கலை இயக்குநர் சாபு சிரிலின் கைவண்ணமும் சேர்ந்துகொள்ள, ஏதோ காட்டுக்குள்ளும் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நாம் வாழ்வது போன்ற உணர்வு அந்த மூன்று மணி நேரமும் நம்மிடம் ஒட்டிக் கொள்கிறது.

பிரமிக்க வைக்கும் காட்சிகளும் பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளும் கூடவே நெகிழ வைக்கும் சென்டிமென்ட்டும் அதனுடன் சுதந்திரப் போராட்ட உணர்வையும் சேர்த்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளதுடன் மீண்டும் தான் ஒரு கிங் என நிரூபித்துள்ளார் இயக்குனர் ராஜமவுலி.

Most Popular

Recent Comments