தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக அம்மா என்றால் சரண்யா பொன்வண்ணன் முகம்தான் உடனடியாக ஞாபகத்துக்கு வரும். அந்தவிதமாக பல படங்களில் பல முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ள சரண்யா, சில படங்களை தனது நடிப்பால் தூக்கி நிறுத்தி இருக்கிறார். அதேசமயம் இவரிடம் உள்ள ஸ்பெஷாலிட்டி மற்ற அம்மாக்கள் போல அழுது வடிந்து சென்டிமென்ட் பேசிக்கொண்டிருக்காமல் காமெடியிலும் களைகட்ட வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதிலும் குறை வைக்க மாட்டார்.
இந்த நிலையில் தனது அடுத்த புரோமோஷனாக ஆக்சன் அவதாரத்தில் இறங்கியுள்ளார் சரண்யா பொன்வண்ணன். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் கிரானி என்கிற படத்தில் டைட்டில் கேரக்டரில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன். விஷ்ணு ராமகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்
கடந்த சில நாட்களாகவே இதுபற்றிய தகவல் வெளியாகி இந்த படத்தின் டைட்டிலை நடிகர் ஜீவா அறிவிப்பார் என மிகப்பெரிய பில்டப்பும் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கேங்ஸ்டர் கிரானி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக டைட்டில் போஸ்டரும் வெளியாகி உள்ளது.
நடிகர் ஜீவாவின் கேரியரில் மிக முக்கியமான ராம் படத்தில் அவரது அம்மாவாக நடித்து முதன்முதலாக ரசிகர்களின் மனதில் அம்மாவாகவே குடியேறியவர் சரண்யா பொன்வண்ணன். அவரது போஸ்டரை ஜீவா வெளியிட்டுள்ளது உண்மையிலேயே சிறப்பு. இதுவரை சாதாரண ஒரு அம்மாவைத் தானே பார்த்து வந்தீர்கள்.. இதோ தற்போது அசாதாரணமான ஒரு கேங்ஸ்டர் ஆக சரண்யா பொன்வண்ணனை பார்க்க போகிறீர்கள் என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஜீவா.