நடிகர் விஜய்சேதுபதி சினிமாவில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சமூகநலப் பணிகளில் கவனம் செலுத்தி தனது பங்களிப்பை அளித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நம்ம ஊரு ஹீரோ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாண்டிச்சேரியை சேர்ந்த வீரராகவன் என்கிற சமூக ஆர்வலர் தன்னால் இயன்றவரை வாட்ஸ்அப் குலுக்கள் துவங்கி கிட்டத்தட்ட மூவாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார் என்கிறார் விஷயம் அப்போது விஜய்சேதுபதிக்கு தெரியவர, ரொம்பவே ஆச்சரியமடைந்தார்.
அதை தொடர்ந்து வீரராகவனுடன் இணைந்து இதையே பெரிய அளவில் செய்து நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடிவு செய்த விஜய்சேதுபதி அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து தான் பார்க்க வந்த மத்திய அரசு பணியை விட்டுவிட்டு முழு நேரமாக இதில் இறங்கிய வீரராகவன், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக விஜய்சேதுபதியின் உதவியோடு தனியாக அலுவலகம் வைத்து இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்புகள் பெற்றுத் தந்துள்ளார்.
வேலை தேடுவோரையும் வேலைக்கு ஆட்கள் தேவை என்கிற நிறுவனங்களையும் ஒன்றிணைத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள் விஜய்சேதுபதியும் வீரராகவனும்.