தொண்ணூறுகளில் ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் உள்ளிட்ட பிரமாண்டமான படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். ஷங்கர். பிரபுதேவா. ஏ.ஆர்.ரஹ்மான் என இன்றைய பிரபலங்கள் அனைவருக்கும் முகவரி கொடுத்தவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. சில வருடங்களாக தயாரிப்பில் இருந்து விலகியிருந்தவர், தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
ஜென்டில்மேன்-2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார் என்று சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் கே.டி.குஞ்சுமோன். இந்த படத்தை இயக்குவது யார். நாயகன் நாயகி யார் என்பது சஸ்பென்ஸாக இருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாக பரவியது. அதேசமயம் நடிப்பது நயன்தாரா தான், ஆனால் சில வருடங்களுக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக நடித்த நயன்தாரா சக்கரவர்த்தி என்பவர்தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என ஒரு ட்விஸ்ட் வைத்து அறிவிப்பு வெளியிட்டார் கே.டி.குஞ்சுமோன்.
இவர் மோகன்லால், மம்முட்டி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் தவிர இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார், அவர் யார் என்பதை அடுத்த அறிவிப்பில் வெளியிடுவோம் என ஒரு சஸ்பென்ஸ் வைத்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.