நடிகர் சங்கத்திற்கு 3 வருடத்திற்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. ஆனால் சில பிரச்சனைகளால் அதன் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பாண்டவர் அணி சார்பாக நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட கூட்டணியினர் மற்றும் சங்கரதாஸ் அணி சார்பாக கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலரும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் சில குளறுபடிகள் நடந்ததாக பாக்யராஜ் அணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தேர்தல் நடந்தது செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு கடந்த ஞாயிறு அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்று மீண்டும் நடிகர் சங்க பொறுப்பிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலினை பாண்டவர் அணியை சேர்ந்த விஷால், நாசர், கார்த்தி, சரவணன், பூச்சி முருகன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றுள்ளனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாசர் நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்பதுதான் எங்களுடைய முதல் பணியாக இருக்கும் என்று கூறினார்