நடிகர் விஷாலை பொருத்தவரை சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் தவறுகள் நடந்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற மனோபாவம் கொண்டவர். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் குளறுபடிகள் நடப்பதாக புகார் கூறியவர், அதற்கு காரணமானவர்களை அகற்றும் விதமாக அவர்களுக்கு எதிராக இரண்டு சங்கங்களின் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு மீண்டும் நடிகர் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலிலும் நாசர், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட கூட்டணியுடன் பாண்டவர் அணி தரப்பில் போட்டியிட்டார். சில பிரச்சனைகளால் இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது தான் நடித்துவரும் லத்தி படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினருடன் சேர்ந்து இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் விஷால்.