தமிழ் சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ்.தாணு. இவரது தயாரிப்பில் ஒரு படமாவது இயக்க விடமாட்டோமா என பிரபல இயக்குனர்களே ஆசைப்படுவது உண்டு. ஆனால் இப்போதுதான் அறிமுகமாகி இருக்கும் இயக்குனரிடம் உங்களது அடுத்த படத்தை எனது நிறுவனத்திற்கு நீங்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மேடையிலேயே அந்த இயக்குனரை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார் கலைப்புலி தாணு.
வெற்றிமாறனின் சீடர் மதிமாறன் என்பவர் இயக்கியுள்ள படம் செல்ஃபி. ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் வர்ஷா பொல்லாம்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை கலைப்புலி எஸ் தாணு தான் வாங்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தாணு பேசும்போது, “இந்த படத்தை மதிமாறன் மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்.. நிச்சயமாக இந்த படம் மூன்று மடங்கு லாபத்தை எங்களுக்கு தரும். படம் பார்ப்பவர்கள் கண் கலங்குவார்கள் என்பது உறுதி.. மதிமாறன் அடுத்த படத்தை எங்கள் நிறுவனத்திற்கு இயக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கை வைத்தார்