குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்களே அதற்கு ஏற்ப 2003ல் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் பரத். அதற்கு முன்னும் பின்னும் அறிமுகமான பல நடிகர்கள் சினிமாவில் இருந்து அப்படியே கரைந்து காணாமல் போய்விட்ட நிலையில் இருபது வருடங்களாக நடிகர் பரத் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்..
இத்தனை வருடங்களில் 49 படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பரத் தற்போது ஐம்பதாவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான துவக்க விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு படத்தை துவக்கி வைத்தார்.
வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, பிக்பாஸ் டேனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்., தெலுங்கு, மலையாளம் மொழிகளில் இருந்து மிகப்பிரம்மாண்டமான படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் போதெல்லாம், அதற்கு தனது அற்புதமான வார்த்தைகளால் உயிர் கொடுத்து வரும் கதாசிரியரும் வசனகர்த்தாவான ஆர்பி பாலா தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் இது.