அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைபேசி என உணர்வுபூர்வமான படங்களை எடுத்து, நான் இப்படித்தான் என ரசிகர்களின் மனதில் அழுத்தமாக தன்னை பதிய வைத்துக் கொண்டவர் இயக்குனர் தங்கர்பச்சான். இந்த நிலையில் தற்போது தனது பாணியில் இருந்து கொஞ்சம் விலகி தனது மகன் விஜித் பச்சானை அறிமுகப்படுத்தும் விதமாக கமர்ஷியலாக டக்கு முக்கு டிக்கு தாளம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வெற்றிமாறன், கஸ்தூரி ராஜா, நடிகர் ஆரி, யூகிசேது உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் பல சுவாரசியமான விஷயங்களும் வெளிப்பட்டன.
தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா பேசும்போது, “துள்ளுவதோ இளமை படத்தை நான் எடுத்த சமயத்தில் அதை யாரும் வாங்க முன்வரவில்லை. முக்கியமான ஒருவரை அழைத்து படத்தை திரையிட்டு காட்டினேன். அவர் பாதியிலேயே கிளம்பிவிட்டார். காரணம் நமது பையனை நாம் பார்க்கலாம்.. காசு கொடுத்து வருபவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஏளனமாக கூறினார். ஆனால் அதே நபர் அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து, எப்படியாவது தனுஷின் கால்ஷீட்டை வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். அதுதான் சினிமா. விஜித்தும் அதுபோல நிச்சயம் வருவார்” என்று வாழ்த்தினார்.
“மகன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றதுமே உடனே அதற்கு ஒப்புக்கொள்ளாமல் எட்டு வருடங்கள் அதற்கான முறையான பயிற்சிகள் கொடுத்து பல தேர்வுகள் வைத்துதான் விஜித்தை ஹீரோவாக மாற்றி இருக்கிறார் தங்கர்பச்சான் அதனால் நிச்சயம் விஜித்திற்கு நல்ல அறிமுகத்தை தரும் என நம்புகிறேன்” என்று கூறினார் வெற்றிமாறன்.
நடிகர் நாசர் பேசும்போது தங்கர்பச்சான், யூகிசேது, தான் மூன்று பேரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்கிற ஒரு ஆச்சரியமான விஷயத்தை வெளியிட்டார். நாசர் பேசும்போது, “விஜித் பச்சான் நடிக்க விரும்புகிறான்ன் என்று தெரிந்ததுமே முதலில் வேண்டாம் என்று நான் தான் கூறினேன். வேறு எதையாவது கற்றுக்கொண்டு பின்னர் நடிக்க வாருங்கள் என்று தான் நான் சொல்வேன்.. என் பிள்ளைகளுக்கும் இப்படி தான் கூறினேன்.. ஆனால் இந்தக் கால குழந்தைகள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்” என்று பாராட்டினார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “ஆட்டோகிராப் படத்தின் விழா நடைபெற்ற சமயத்தில் கமர்சியல் படங்களை விமர்சித்துப் பேசினார் தங்கர்பச்சான். நான் கமர்சியல் இயக்குனர் தான். அதனால் அவரது படங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.. இருந்தாலும் இப்போது அவரே கமர்சியல் படத்தை இயக்கி இருப்பது காலத்தின் மாற்றம் தான்.. வரவேற்கிறேன்” என்று கூறினார்.
“அழகி படம் பார்த்துவிட்டு இப்படி ஒரு படத்தில் தங்கர்பச்சான் சாருடன் இணைந்து பணியாற்ற முடியாதா என்று நினைத்தது உண்டு. அது இப்போது நனவாகி இருக்கிறது. இதில் தேவா சாரை அழைத்து பாட வைத்ததுடன் அவரது ட்யூனையே சுட்டிருக்கிறோம் என்று கூட கூறினோம்.. அதெல்லாம் இல்லை.. இசை நன்றாக இருக்கிறது என்று தேவா பெருந்தன்மையுடன் பாராட்டியுள்ளார்” என்றார் இசையமைப்பாளர் தரன்குமார்.
“தங்கர்பச்சான் ஒருபோதும் கதாநாயகனை நம்பி படம் எடுத்ததில்லை. கதையின் நாயகனாக தான் படம் எடுத்து அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல விஜித் பச்சானும் கதையின் நாயகனாக இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தினார் நடிகர் ஆரி.
இயக்குனர் ஆர்வி.உதயகுமார் பேசும்போது, “நான் படம் இயக்கிய காலத்திலேயே என்னுடைய ஒளிப்பதிவாளர் ரவி யாதவிடம் உதவியாளராக வேலை பார்த்தவர் தங்கர்பச்சான். ஒரு காட்சி பிடித்தால் பிடிக்கிறது என்பார். இல்லை என்றால் இதெல்லாம் ஒரு ஷாட்டா என்று திட்டுவார். அவர் இயக்கிய படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு இவர் திருந்த மாட்டார்.. இதுபோன்ற படங்கள் தான் எடுப்பார் என்று அவரிடம் அறிவுரை கூறுவதை விட்டு விட்டேன்.. ஆனால் இப்போது அவரே கமர்சியல் படத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சிதான்” என்றார்.
இயக்குனர் தங்கர்பச்சான் பேசும்போது, “சிறு வயதில் எந்த படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கிறதோ அந்த படத்திற்கு தான் நான் செல்வேன். அப்படித்தான் சினிமா என்னை வளர்த்தெடுத்தது. ஆனால் என் மகன் விஜித் என்னுடைய இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தான். இல்லை என்றால் ஆறு வருடத்திற்கு முன்பே அவரை நடிக்க வைத்து இருப்பேன்.. இந்த விழா நடக்கும் கிருஷ்ணவேணி திரையரங்கில் தான் எனது அழகி படம் 150 நாட்கள் ஓடியது” என்று கூறினார்.