Home News Kollywood அரபிக்குத்தின் ஆட்டமே இன்னும் அடங்கவில்லை.. அடுத்து களமிறங்கும் ஜாலியோ ஜிம்கானா..

அரபிக்குத்தின் ஆட்டமே இன்னும் அடங்கவில்லை.. அடுத்து களமிறங்கும் ஜாலியோ ஜிம்கானா..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த மாதம் இருந்தே இந்த படத்தின் ஒவ்வொரு பாடலாக களமிறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த வகையில் கடந்த மாதம் இந்தப்படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து பாடல் ரசிகர்களின் தேசிய கீதமாகவே ஆகிவிட்டது என்று சொல்லுமளவிற்கு எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் அரபு மொழியும் கலந்து எழுதப்பட்டிருந்த அந்த பாடல், விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான ரசிகர்களையும் வயதானவர்களையும் கூட கவர்ந்திழுத்துள்ளது.

இந்த பாடலுக்கு ஒவ்வொரு பிரபல நட்சத்திரங்களும் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தி சோஷியல் மீடியாவில் அவற்றைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த அளவுக்கு இந்தப்பாடல் அனைவரையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக ஜாலியோ ஜிம்கானா என்கிற பாடலை வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் இதை விஜய்யே பாடியுள்ளார். இதுகுறித்த புரோமோ வீடியோ ஒன்றை இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது இதற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. அனைவரும் மார்ச் 19ஆம் தேதி ஜாலியோ ஜிம்கானாவை வரவேற்க தயாராக காத்திருக்கிறார்கள்.