கிட்டத்தட்ட பத்து வருடங்களாக சினிமாவில் நகைச்சுவை மூலம் தனது பங்களிப்பை தராமல் ரசிகர்களை ஏங்க வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. இடையில் கத்திச்சண்டை, மெர்சல், எலி. தெனாலிராமன் ஆகிய படங்களில் நடித்தாலும் கூட, ரசிகர்களுக்கு அவற்றில் பெரிய அளவில் திருப்தி ஏற்படவில்லை. இந்தநிலையில் தற்போது மீண்டும் முழுவீச்சில் நடிப்பில் களமிறங்கியுள்ளார் வடிவேலு.
அந்த வகையில் தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் வடிவேலு, இன்னொரு பக்கம் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் மாமன்னன் என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தில் உதயநிதியுடன் பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் வடிவேலுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சேலத்தில் தற்போது நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்றுமுதல் கலந்துகொண்டுள்ளார் வடிவேலு.















