கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால் அப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிய இவர், புட்டபொம்மா பாடலின் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார். இதோ இப்போது அரபிக்குத்து பாடலுக்கு ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவை இன்னும் பல வருடங்கள் ஆட்டி வைக்கப் போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழில் நுழைந்துள்ள பூஜா ஹெக்டே, படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் விஜய்யை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை என பேட்டிகளில் கூறி வருகிறார்.
விஜய்யின் எளிமை, மற்றவர்களிடம் பழகும் விதம், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, படப்பிடிப்பு தளத்திற்கு அதிகாலையிலேயே வந்து இயக்குனர் அழைப்பதற்கு முன் தயாராகி நிற்பது என அவரது செயல்கள் ஒவ்வொன்றும், அவர் இந்த இடத்தை அடைந்ததற்கான காரணங்களை சொல்லாமல் சொல்கின்றன என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.
மேலும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விட்டால் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சை மட்டுமே விஜய் பேசுவார் என்று கூறியுள்ள பூஜா ஹெக்டே, எத்தனையோ முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன்.. ஆனால் விஜய் போன்ற ஒரு கடின உழைப்பாளியை நான் இப்போது தான் பார்க்கிறேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.















