V4UMEDIA
HomeNewsKollywoodசிவகுமார் படத்தை பார்க்க கமலுக்கு கேரளா வருமாறு அழைப்பு

சிவகுமார் படத்தை பார்க்க கமலுக்கு கேரளா வருமாறு அழைப்பு

செய்தியின் தலைப்பை பார்த்ததுமே இது என்ன சம்பந்தமே இல்லாமல் இப்படி ஒரு செய்தி என்கிற எண்ணம் தோன்றுகிறதா ? விஷயம் இருக்கிறது.. கேரளாவில் வருடந்தோறும் நடைபெறும் கேரள சர்வதேச திரைப்பட விழா வரும் மார்ச் 18 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் சமீபத்தில் மறைந்த திரையுலக ஜாம்பவான்களை பெருமைப்படுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமான பிரபல மூத்த இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் 1991ல் தமிழில் சிவகுமாரை வைத்து இயக்கிய மறுபக்கம் என்கிற திரைப்படம் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.

சேதுமாதவன் இயக்கிய மலையாள படங்கள் மலையாள ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.. அதேசமயம் அவர் தமிழில் இயக்கிய 3 தேசிய விருதுகள் பெற்ற மறுபக்கம் படத்தையும் மலையாள ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில் தான் இந்த திரைப்படம் திரையிடப்பட இருக்கிறதாம்.

அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு அனுப்ப முடிவு செய்திருக்கிறது விழா கமிட்டி. இயக்குனர் சேதுமாதவனுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்தான் நடிகர் கமல்ஹாசன். 1994-ல் தான் நடித்த நம்மவர் படத்தை கூட சேதுமாதவன் தான் இயக்க வேண்டும் என அன்பு கட்டளை போட்டு அந்த படத்தை அவரையே இயக்க வைத்தார் கமல்.

Most Popular

Recent Comments