நடிகர் விக்ரம் பிரபு கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கிட்டத்தட்ட 10 வருடங்களை தொட்டுள்ளார். இதுவரை சுமார் 15 படங்களுக்கு மேல் நடித்து விட்ட விக்ரம் பிரபு, கும்கி, அரிமா நம்பி படங்களை போல ஒரு மிகப்பெரிய ஹிட்டுக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ரிலீசுக்கு தயாராக உள்ள டாணாக்காரன் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது உண்மை. மேலும் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தமிழ் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
அஞ்சலி நாயர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாயா, மாநகரம் படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
விரைவில் ரிலீசாகும் விதமாக இந்த படம் தயாராகி வந்தாலும் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறது. இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி படம் கூட நேரடியாக சன் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பானது. தற்போது இந்த படமும் ஒடிடி தளத்தில் வெளியானாலும் கூட, படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கின்றனர் மொத்த படக்குழுவினரும்.