கர்ணன், ருத்ர தாண்டவம் படங்களில் ரசிகர்கள் கண்களில் படும்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் சிதம்பரம். கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரி நட்டி தனுஷின் கிராமத்திற்குள் நுழைந்ததும் உட்கார நாற்காலி கேட்பார்…. அதை ஒருவர் கொண்டுவந்து போட்டதும் அதன்பிறகு அதை எட்டி உதைப்பார் அல்லவா ? அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் சிதம்பரம்.
தென்காசியை சேர்ந்த சிதம்பரம், என்ஜினீயரிங் படித்துவிட்டு குற்றாலம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் முக்கிய பொறுப்பில் பணிபுரிந்து வருகிறார். சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை காட்டிவரும் சிதம்பரம், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு லாரிகளில் கழிவுகளை கொண்டுவந்து கொட்டி செல்லும் அநியாயத்தை எதிர்த்து தனி ஆளாக நின்று 20 லாரிகளை மடக்கி பிடித்து அவற்றை மீண்டும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பி அதிர வைத்தவர்.. அப்படி இவர் செய்த காரியத்தால் இதையே தொழிலாக செய்து வந்தவர்களின் எதிர்ப்பையும் கொலை மிரட்டலையும் கூட சம்பாதித்துள்ளார்
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் இன்னும் ஆழமாக ஏற்படுத்துவதற்கு சினிமா தான் சரியாக இருக்கும்.. அதிலும் குறிப்பாக ஒரு நடிகனாக மாறி இந்த விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அது இன்னும் அதிக அளவில் கவனம் பெறும் என்பதாலேயே சினிமாவில் நுழைந்தாராம் சிதம்பரம்.
தற்போது 143 என்கிற வெப்சீரிஸில் வில்லனாக ஐந்து எபிசோடுகளில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படம், இயக்குனர் ராஜுமுருகன் டைரக்ஷனில் கார்த்தி நடிக்க உள்ள படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன் என்கிறார் சிதம்பரம்.