மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். கிராமத்தில் வசிக்கும் ஒரு வயதான பெரியவருக்கும் அவருக்கு உதவியாக பணியமர்த்தப்பட்ட ஒரு ரோபோவுக்குமான பாசப்பிணைப்பை பற்றிய படமாக இது உருவாகி இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் வரவேற்பையும் பெற்றது.
இந்த படத்தை தற்போது தமிழில் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா நடிப்பில் கூகுள் கிட்டப்பா என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சரவணன் மற்றும் சபரிகிரி வாசன் என்கிற இரட்டையர் இந்த படத்தை இயக்கி உள்ளனர். இந்த படத்தையும் கே.எஸ்.ரவிக்குமார் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை நான் பார்த்திருக்கிறேன். அப்போது இவர்கள் இருவரும் வந்து என்னிடம் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என கூறியபோது கதையில் என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர்கள் கூறியதைக் கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டேன் என்று கூறினார்.
இந்த படத்தில் கதைப்படி கதாநாயகி வெளிநாட்டில் வசிப்பவர். இதன் மலையாள ஒரிஜினலில் கதையின் நாயகி சீனாவிலிருந்து ரஷ்யாவுக்கு வந்து வேலை செய்யும் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள லாஸ்லியா நிஜத்திலேயே ஒரு இலங்கை தமிழ்ப்பெண் என்பதால் அவரது நிஜ கதாபாத்திரத்தையே வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழ்பெண் என்பதுபோல தமிழுக்காக மாற்றி உள்ளார்களாம்.