நேர்மையான பத்திரிக்கையாளர் ராம்கி அரசியல்வாதி ஒருவரின் ஊழலை அம்பலப்படுத்தியதால் அநியாயமாக கொல்லப்படுகிறார். அதேநாளில் அவரது மனைவியும் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு இறக்கிறார். ராம்கியின் மகன் தனுஷ் தனது தங்கைக்கு அம்மா அப்பா என இன்னொரு அண்ணாத்தே ஆக மாறுகிறார். ராம்கியின் நண்பர் ஆடுகளம் நரேன் பாதுகாவலில் வளரும் தனுஷ் அப்பாவை போல தானும் ஒரு ஜர்னலிஸ்ட் ஆகிறார்.
தந்தையைப் போலவே தானும் நேர்மையாக பயணிக்க வேண்டும் என நினைக்கிறார் தனுஷ். அதனால் தனது தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஓட்டு மிஷினில் குளறுபடி செய்து வெற்றி பெற நினைக்கும் சமுத்திரகனியின் திட்டத்தை அம்பலப்படுத்துகிறார். இதனால் அவரது கோபத்திற்கு ஆளாகும் தனுஷ், தனது தங்கையை தன் கண் முன்னே தீக்கு பலி கொடுக்கிறார்.
தங்கை போனபின் விரக்தியால் குடிகாரனாக மாறும் தனுஷை அவரது காதலி மாளவிகா மேனன் உசுப்பேற்றி தங்கையின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும்படி தூண்டி விடுகிறார். இதைத்தொடர்ந்து தீவிரமான விசாரணையில் இறங்கும் தனுஷுக்கு தனது தங்கையின் கொலையில் இரண்டுவிதமான எதிர்பாராத உண்மைகள் தெரிய வருகின்றன. அவை என்ன என்பது கிளைமாக்ஸ்.
ஜர்னலிஸ்ட் கதாபாத்திரம் புதுசு என்பதாலோ என்னவோ அதில் துள்ளலும் துடிப்புமான நடிப்பை வழங்கியுள்ளார் தனுஷ். முற்பாதியில் தங்கையுடன் கேலி கிண்டல் காதலியுடன் ஜாலி கலாட்டா என சராசரி இளைஞனாக வலம் வரும் தனுஷ், பிற்பாதியில் தங்கையின் மரணத்திற்குப்பின் ஒரு அசுரனாக மாறிப்போகிறார்.
கண்ணாடி ஜாடிக்கேத்த பீங்கான் மூடி என்பது போல மாளவிகா தனுஷ் காம்பினேஷன் புதுசாக இருக்கிறது. அதேசமயம் கவர்ச்சியை குறைத்து அலட்டல் இல்லாத நடிப்பால் அடக்கி வாசித்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
மாளவிகாவை விட தனுஷின் தங்கையாக நடித்துள்ள ஸ்மிருதி வெங்கட் அதிகம் ஸ்கோர் செய்கிறார் தனுஷுடனான டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டத்தில் புன்னகைக்க வைக்கிறார்.
இவர்களைத் தாண்டி தனுஷின் நண்பனாக வரும் போலீஸ் அதிகாரி கிருஷ்ணகுமார், நட்புக்கும் கடமைக்குமான நூலிழை வித்தியாசத்தை படம் முழுவதும் மிகச்சரியாக பிரதிபலித்து மனதில் நிற்கிறார். ஆரம்பக் காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நேர்மையான பத்திரிக்கையாளராக மனதை தொடுகிறார் ராம்கி.
காரடியன் ஆக ஆடுகளம் நரேன், பத்திரிகையாளர்களாக ஜெயபிரகாஷ் இளவரசு ஆகியோரும் தங்களது பங்களிப்பை நிறைவாக தந்திருக்கிறார்கள். மாஸ்டர் மகேந்திரனை போலீஸ்காரராக பார்க்கும்போது சிரிப்பு கலந்த ஆச்சரியம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.. பாடல்களில் கவனம் செலுத்த தவறினாலும் பின்னணி இசையில் அதை ஓரளவு சரி கட்டி விடுகிறார் ஜிவி பிரகாஷ்.
போரடிக்காமல் படம் நகர்கிறது என்பது படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.
மொத்தத்தில் இந்த மாறன் எதற்கும் துணிந்தவன்… ஆனால் முன்யோசனை இல்லாமல்…