தமிழ் திரையுலகம் பெண் இயக்குனர்களின் வருகை ரொம்பவே குறைவு. இந்த நிலையில் சந்திரா தங்கராஜ் என்கிற பெண் இயக்குனர் கள்ளன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கரு.பழனியப்பன் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மார்ச் 18ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆரி கலந்து கொண்டார்..
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “பெண் இயக்குனர்கள் திரையுலகிற்கு வருவதை வரவேற்க வேண்டும். அவர்களது முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். இந்த படத்தின் நாயகனாக நடித்த இயக்குனர் கரு.பழனியப்பன் இந்த விழாவிற்கு வரவில்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அதை எல்லாம் மறந்துவிட்டு தன்னுடைய படத்தின் விழாவிற்கு அவர் வந்திருக்கவேண்டும். அவர் வரவில்லை என்பது வருத்தம்தான்.. பல்லக்குத் தூக்கும் காலம் முடிந்து விட்டது.. ஆனால் இன்றைக்கு இந்த படத்திற்கு சம்பந்தமில்லாத என்னை போன்ற சிலர் வந்து இந்த படத்தை தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது..
அதுபோல நல்ல படமாக இருந்தாலும் அதை சரியான சமயத்தில் ரிலீஸ் செய்தாள் தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். அதற்கு நேரம் அமைவது முக்கியம். இயக்குனர் சீனுராமசாமியின் படத்தில் நடிப்பதற்காக என்னை மறுநாள் காலை வந்து பார்க்கும்படி கூறியிருந்தார். ஆனால் அன்றைய தினம் எனது உறவினர்கள் திருமண பத்திரிக்கை வைப்பதற்காக என் வீட்டிற்கு வந்ததால் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. அதன்பிறகு அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு அமையவில்லை.. அப்படியே அந்த விஷயம் என் கையை விட்டுப் போய்விட்டது. அப்படி அவர் என்னை அழைத்த அந்த படம்தான் தென்மேற்கு பருவக்காற்று. அந்தப்படத்தின் மூலம்தான் விஜயசேதுபதி என்கிற சிறந்த நடிகரும் கிடைத்தார்.
அதேபோல இந்த கள்ளன் படத்தில் நான் நடித்து இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தின் கதையை சந்திரா கூறியபோது இது ஏற்கனவே நான் நடித்த நெடுஞ்சாலை கதை பொல்லா இருப்பது போன்று காரணம் சொல்லி ஒதுக்கி விட்டதாக இயக்குனர் சந்திரா கூறினார். எனக்கு அது சரியாக நினைவில் இல்லை.. ஆனால் ரெட்டச்சுழி படத்தில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியபோது இருந்து அவரை தெரியும்.. நாம் இருவரும் இணைந்து படம் செய்தால் நமக்குள் மிகப்பெரிய சண்டைதான் வரும் என விளையாட்டாக கூறுவேன்.. அதனால்தான் இந்தப்படத்தில் இருந்து நான் ஒதுங்கிக் கொண்டேன் என நினைக்கிறேன்.. ஆனால் அப்படி கூறியிருக்கக் கூடாது.. அதற்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்..
புளூ சட்டை மாறன் போன்றவர்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்து தயாரிப்பாளரின் தலையில் மண்ணை அள்ளிப் போடக்கூடாது.. விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.. தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மூலம் தங்களையும் தரம் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.” என்று பேசினார்.