பெண்கள் தினத்தை முன்னிட்டு திரையுலகினர் பலரும் பெண்கள் குறித்து விதவிதமான கருத்துக்களையும் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்வுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதேசமயம் சமந்தா நடித்துவரும் யசோதா படக்குழுவினர் சற்று வித்தியாசமான கோணத்தில் தங்களது படத்தில் பணியாற்றும் பெண்களை கவுரவப்படுத்தியுள்ளனர். பொதுவாக ஒரு படத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் நபர்கள், குறிப்பாக பெண்கள் வெளியே தெரிவதில்லை.
ஆனால் யசோதா படத்தில் பணியாற்றிய புரடக்சன் டீமில் பணியாற்றும் பெண்கள், ஒப்பனைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரது புகைப்படங்களையும் அவர்கள் பெயருடன் ஒன்றிணைத்து அவற்றுடன் படத்தின் கதாநாயகிகளான வரலட்சுமி, சமந்தா இருவரையும் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு திரையுலகின் இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் இயக்கிவரும் இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்துவருகிறார்.