நடிகர் ஜெய்யை பொருத்தவரை திறமையான நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போதும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். அதேசமயம் அவர் தனது படங்களின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்து, படங்களை குறித்த நேரத்தில் முடித்து தர உதவுவதில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டும், அதேபோல தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வதில்லை என்கிற இன்னொரு குற்றச்சாட்டும் அவர் மீது நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் சமீபகாலமாக அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது கண்கூடாகவே தெரிகிறது. உதாரணமாக சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த வீரபாண்டியபுரம் படத்தை திட்டமிட்டபடி குறித்த நாட்களில் முடிப்பதற்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார் ஜெய். மற்ற படங்களிலும் அதுபோலவே நடித்து வருகிறார் என்கிற தகவல்களும் அவ்வப்போது வெளியாகின்றன. அதுமட்டுமல்ல தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும் பதிலளிக்கிறார்.
இந்தநிலையில் பெண்கள் தினத்தில் பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக குறிப்பாக பத்திரிகைகளில் பணியாற்றும் பெண் பத்திரிக்கையாளர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பட்டுச்சேலைகளை பரிசளித்து அசத்தியுள்ளார்.
தற்போது சுந்தர்.சி படத்திற்காக ஊட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஜெய் நடித்து வருவதால், அவரது சார்பாக அவரது தந்தை சம்பத் மற்றும் சகோதரி சந்தியா இருவரும் பெண் பத்திரிகையாளர்களிடம் இதை வழங்கினார்கள்.
“பெண் பத்திரிகையாளர்களையும் நம் குடும்பத்து சகோதரிகளில் ஒருவராக பார்க்கிறேன். நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும் வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டேன். அதனால் அவர்களுக்கு என் அன்பை, நன்றியை சொல்லும் வகையில் பட்டுப் புடவைகளை வழங்கினேன்.” என்றார் என்கிறார் ஜெய். நிஜமாகவே ஜெய் மாறித்தான் போய்விட்டார்.. ஆம்.. இந்த மாற்றம் அவரது வளர்ச்சிக்கான மாற்றம்..