நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கடந்த பல வருடங்களாக மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் அங்கீகாரத்துடன் செயல்பட்டால் இன்னும் அவர்களுக்கு உதவிசெய்ய முடியும் என்பதற்காக அரசியலில் இறங்கி தேர்தலிலும் களம் கண்டு வருகின்றனர். இந்தநிலையில் வாரத்தில் ஒருநாள் கட்டாயம் மக்கள் பணிக்காக ஒதுக்கியே ஆகவேண்டும் என ஞாயிற்றுக்கிழமையை மக்கள் பணிக்காக ஒதுக்கி சமூக நலப்பணி நாள் என்று அறிவித்து புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. தளபதி மக்கள் இயக்கம்.
இதன்படி இந்த திட்டத்தை அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். இனி இந்த திட்டம் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கட்டமாக நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக தான், புதுச்சேரியில் நேற்று ஏழை முதியவர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.