பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது, அதில் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் போட்டியாளர்களில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆர்மி துவங்கி போட்டியாளரை வலுப்படுத்தி, அவருக்கு பக்கபலமாக ரசிகர்கள் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. முதல் சீசனில் ஆரம்பித்த ஓவியா ஆர்மியிலிருந்து லாஸ்லியா ஆர்மி, சிவானி ஆர்மி, பாவ்னி ஆர்மி என இளம் போட்டியாளர்களுக்கு தாங்களாகவே ரசிகர்கள் ஒரு ஆர்மியை உருவாக்கி விடுகின்றனர்.
அந்தவகையில் தற்போது தெலுங்கில் நடிகை பிந்து மாதவிக்குக்கும் பிந்துமாதவி ஆர்மியை அவரது ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். தமிழில் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தொடங்கியது அல்லவா.? அதேபோல தெலுங்கிலும் நான்ஸ்டாப் பிக்பாஸ் என்கிற பெயரில் இதே போன்ற ஒரு நிகழ்ச்சி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே தமிழில் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்த பிந்துமாதவி, இந்த தெலுங்கு பிக்பாஸ் நான்ஸ்டாப் நிகழ்ச்சியிலும் ரசிகர்களை தனது வசீகர புன்னகையாலும் பேச்சாலும் கவர்ந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு பிந்துமாதவி ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் அவரால் ஈர்க்கப்பட்டு உள்ளனர்.
இது ஒருபக்கம் இருக்க தற்போது தமிழில், நடிகர் சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய், மாயன் மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ‘யாருக்கும் அஞ்சேல்’ என பிந்துமாதவியின் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.