நடிகர் சிவகுமாரின் கலையுலக வாரிசுகளாக களமிறங்கிய அவரது இரண்டு மகன்களான சூர்யாவும் கார்த்தியும் முன்னணி நடிகர்களாக கோலோச்சி வருகின்றனர். அதேசமயம் இன்னொரு பக்கம் சமுதாயம் சார்ந்து தங்களது பங்களிப்பையும் ஆளுக்கு ஒரு விதமாக கொடுத்து வருகின்றனர்.
சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக ஏழை மாணவர்களின் கல்விக்கான மேம்பாட்டு பணிகளை கவனித்து வருகிறார். கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் ஆரம்பித்து விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் அவர்களது உழைப்பையும் சாதனையையும் கௌரவப்படுத்தும் வகையில் தொடர்ந்து தனது பணியை செய்து வருகிறார்.
அந்த வகையில் உழவர் விருதுகள் 2022 என்கிற நிகழ்வை நடத்தி விவசாயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் சாதனை செய்த தனி விவசாயிக்கும் விவசாய குழுக்களுக்கும் விருதுகள் வழங்கியதுடன், அவற்றுடன் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலையும் வழங்கி அவர்களை கௌரவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கார்த்தி பேசும்போது, “விவசாயம் சம்பந்தமாக இதுவரை அரசு சாராத அமைப்புகள் செய்ய தவறைய செயல்களை எல்லாம் ஆய்வு செய்து பார்த்தபோது, எந்த விஷயங்களை அவை கவனிக்க தவறிவிட்டன என்பதையெல்லாம் நான் உன்னிப்பாக கவனித்தேன்.. அதுதான் விவசாயத்தின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பியது இந்த உழவன் பவுண்டேஷனையும் ஆரம்பிக்க வைத்தது.
இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு விஷயத்தை செய்ததும் அதற்கான ரிசல்ட்டை உடனடியாக எதிர்பார்க்கிறோம். ஆனால் விவசாயத்தில் மட்டும்தான் விதைகளை விதைத்து, பயிராக வளர்ப்பது, பாதுகாப்பது, அறுவடை செய்வது என ரொம்பவே பொறுமை தேவைப்படும்.. விவசாயிகளின் அந்த பொறுமையை பெருமைப்படுத்தும் நோக்கில்தான் இந்த உழவர் விருதுகளை வழங்கி விவசாயிகளை கவரவிக்கும் எண்ணம் தோன்றியது என்று கூறினார்.