இயக்குனர் செல்வராகவன் கடந்த ஒரு வருட காலமாக நடிப்பின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள சாணிக்காயிதம் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அந்த படத்தில் குத்தவைத்தபடி அவர் அமர்ந்திருக்கும் தோற்றத்தை பார்க்கும்போது ஒரு நடிகராகவும் ரசிகர்களை எளிதில் வசீகரித்து விடுவார் என்பது உறுதி.
அதை கணக்கிட்டு தானோ என்னவோ தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கிவரும் நெல்சன் திலீப்குமாரும் அந்த படத்தில் இயக்குனர் செல்வராகவனை ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிப்பதற்கு செல்வராகவனை தேடி வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் என்கிற படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். நேற்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் தனுசுடன் செல்வராகவனும் வித்தியாசமான கெட்டப்பில் இடம்பெற்றிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் இந்த படத்தில் செல்வராகவனும் நடிக்கிறாரா என்பது போன்று பேச ஆரம்பித்தார்கள்..
அதன்பிறகு இந்தப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு “இயக்குனராக சாதித்தது போல நடிப்பிலும் சாதிப்பீர்கள்” என செல்வராகவனை வாழ்த்தினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக செல்வராகவன் கூறும்போது, “ என்னுடைய குழுவினரின் விருப்பம் அதுவாக இருந்தது.. அவர்களது விருப்பமே எனது கட்டளை” என்று கூறி, தான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார் செல்வராகவன்.