சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் என இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். வரும் மார்ச் 10ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.
தெலுங்கில் இந்தப் படம் ‘எவரிகி தல மஞ்சாடு’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. சூர்யாவுக்கு தமிழைப்போலவே தெலுங்கிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டம் மற்றும் வியாபாரம் மார்க்கெட் இரண்டுமே இருக்கிறது. இதனால் எப்போதும்போல இந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தெலுங்கில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் போயபதி சீனு மற்றும் நடிகர் ராணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் போயபதி சீனு பேசும்போது, “சூர்யாவின் படம் தெலுங்கில் வெளியாகும்போது, வேறு ஏதோ புதிய நடிகர் படம் வெளியாவது போன்ற உணர்வே எங்களுக்கு ஏற்படுவதில்லை.. சூர்யா இந்த ஊர்க்காரராக தான் எங்களுக்கு தெரிகிறார். இது ரொம்பவே அரிதான விஷயம். இதற்குமுன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே அதுபோன்ற ஒரு உணர்வை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். அதற்கடுத்ததாக சூர்யாவைத்தான் எங்கள் வீட்டுப் பிள்ளையாக நாங்கள் பார்க்கிறோம்” என்று கூறினார்.
அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரை சொன்னபோது அரங்கம் கரகோஷத்தால் அதிர ஆரம்பித்தது. இயக்குனர் அவ்வாறு கூறியதும் சூர்யா அனைவரையும் நோக்கி கை கூப்பியபடி குனிந்து நிலத்தைத் தொட்டு வணங்கியதை பார்க்கும்போது, இந்த பாராட்டு மூலம் அவர் எந்த அளவிற்கு பெருமிதம் கொள்கிறார் என்பதை உணர்த்தியது.