V4UMEDIA
HomeNewsKollywoodஅரசியலுக்கு வரும் எண்ணம் அஜித்துக்கு இல்லை ; தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்

அரசியலுக்கு வரும் எண்ணம் அஜித்துக்கு இல்லை ; தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர்களாக நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதில் விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி நடத்திவருகிறார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்பது கண்கூடாகவே தெரிகிறது.

அதேசமயம் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பலம் இருந்தாலும், அவர் தனது ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டார்.. தனது படம் வெளியாகும்போது அதை பார்த்து ரசித்தால் மட்டும் போதும், மற்றபடி உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என தலைவர் ரஜினிகாந்த் பாணியிலேயே அவரும் தெரிவித்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்.

ஆனாலும் அவ்வப்போது அவர் அரசியலுக்கு வருகிறார் என்பது போன்றும் அதிமுகவுடன் அவரை தொடர்பு படுத்தியும் பல செய்திகள் வெளியாவது உண்டு. இந்த நிலையில் அஜித்துக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் கொஞ்சம்கூட இல்லை என அவரது மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தெளிவுபடுத்தியுள்ளார்.

சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றில் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என ஜெயலலிதாவின் உதவியாளர் கூறியதாக ஒரு பேட்டி வெளியானது. அதை மேற்கோள் காட்டியுள்ள சுரேஷ் சந்திரா, அஜித்துக்கு அரசியலுக்கு வரும் நோக்கம் எதுவும் இல்லை. அதனால் தயவு செய்து மீடியாக்கள் இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்றும் தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Most Popular

Recent Comments