உணர்வுப்பூர்வமான, உயிரோட்டமான படங்களை தந்து ரசிகர்களின் மனதில் ஆழ ஊடுருவியவர் இயக்குனர் தங்கர்பச்சான். அவரது அழகி படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது மகன் விஜித் பச்சான் தக்கு முக்கு திக்கு தாளம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் இந்த படத்தை தங்கர்பச்சான் இயக்கியுள்ளார்.
அது என்ன விஜித் என்கிற பேரே புதிதாக இருக்கிறதே என பலருக்கும் ஒரு குழப்பம் ஏற்பட்டு இருக்கும். ஆனால் தற்போது தங்கர்பச்சானின் அழகி மூலம் கூடுதலாக 20 வருட திரை பயணத்தை பெற்ற இயக்குனர் பார்த்திபன் விஜித் பச்சானுக்கு கூறியுள்ள வாழ்த்தில் அவரது பெயருக்கான காரணத்தையும் கண்டுபிடித்து வாழ்த்தியுள்ளார்.
அதாவது விஜய் பிளஸ் அஜித் என இருவரின் பெயர்களையும் இணைத்து அதில் தான் விஜித் என்கிற பெயரை தங்கர்பச்சான் உருவாக்கியுள்ளார் என்று கணித்துள்ள பார்த்திபன், விஜித் பச்சான் மிகப் பெரிய நடிகராக வருவார் என வாழ்த்தியுள்ளார்.