இசைஞானியின் இசை வாரிசாக கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா. இந்த 25 வருடங்களில் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் விதமாக முன்னணி இசையமைப்பாளர் ஸ்தானத்தில் ராஜாவாகவே வலம் வருகிறார்.
ரசிகர்கள் விரும்பும் விதம்விதமான பாடல்களை கொடுத்து அவர்களை துள்ளாட்டம் போட வைக்கும் யுவன் சங்கர் ராஜா, தன்னுடைய வீட்டில் எப்போதுமே கேட்பது தனது தந்தை இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்களைத்தான்.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய யுவன் சங்கர் ராஜா, “நான் வீட்டில் என் அப்பாவின் பாடல்களைத்தான் அடிக்கடி கேட்பேன்.. அவர் பாடல்களை தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும்போது என் மனைவி கூட போதும் என என்னை திட்டுவார். ஆனால் எனக்கு அவர் பாடல்கள் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல சமீபத்தில் மறைந்த இந்தியாவின் கானக்குயில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து ஒரு பாடலுக்காவது பணியாற்றிட வேண்டும் என தான் விரும்பியதாகவும் அது நிறைவேறாமல் போனதில் தனக்கு மிகப்பெரிய வருத்தம் என்றும் கூறினார் யுவன் சங்கர் ராஜா.