கடந்த இரண்டு வருடங்களாக நிலவி வந்த கொரோனா தாக்கம், சினிமா இயக்குனர்கள் பலரையும் மாற்றி யோசிக்கவைத்துள்ளது. பிரமாண்டமாக படம் எடுத்த சில இயக்குனர்கள் கோவிட் வழிமுறையை பின்பற்றி அதற்கான பட்ஜெட்டில், பிரச்சனைகள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தும்படியான கதைகளை உருவாக்க ஆரம்பித்தனர்..
மோகன்லாலை வைத்து ராம் என்கிற படத்தை ஹாலிவுட் பாணியில் பிரமாண்டமாக இயக்கிவந்த இயக்குனர் ஜீத்து ஜோசப் கொரோனா தாக்கம் காரணமாக அந்த படத்தை நினைத்தபடி எடுக்க முடியாததால் அப்படியே பாதியில் நிறுத்திவிட்டார். அதற்கு பிறகு உள்ளூரிலேயே குறைந்த அளவு ஆட்களை வைத்து பிரச்சினை இல்லாத லொகேஷனில் எடுக்கும் விதமாக திரிஷ்யம் 2 படத்தின் கதையை உருவாக்கி குறுகிய காலத்திலேயே அதை வெளியிட்டு ஹிட் படமாகவும் ஆக்கினார்
அதே பாணியில்தான் இயக்குனர் வெங்கட் பிரபுவும் மாநாடு படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வந்த சமயத்தில், கொரோனா தாக்கம் காரணமாக அதை பாதியில் நிறுத்திவிட்டு, குறுகிய கால பட்ஜெட்டாக ஒரு படத்தை இயக்க முடிவு செய்து உருவாக்கிய படம்தான் மன்மத லீலை.
அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையை எழுதியது வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் என்பவர் தான்.
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் முக்கிய சம்பவங்களை பற்றி உருவாகியுள்ள இந்த படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி இந்தப் படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.