இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல் நடப்பது வழக்கம். இந்த முறை ஆர்கே.செல்வமணி அணியும், அவரை எதிர்த்து இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் களமிறங்கின. ஆர்.கே.செல்வமணியின் மீது பல குற்றச்சாட்டுகளை பாக்கியராஜ் முன்வைத்தார். அவரது செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாலேயே தான் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டிய சூழல் உருவானது என்றுகூட தனது பிரச்சாரத்தில் பாக்யராஜ் பேசி வந்தார்.
அதனால் இந்த தேர்தலில் இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்றும் வெற்றி தோல்வி கூட குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் தான் இருக்கும் என சொல்லப்பட்டு வந்தது.. இந்த நிலையில் இன்று இயக்குனர் சங்க தேர்தல் நடைபெற்று முடிந்தது.
மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு ஆர்.கே.செல்வமணி அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாக்யராஜை விட கிட்டதட்ட 400 வாக்குகள் அதிகமாக பெற்று ஆர்கே.செல்வமணி இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “நாங்கள் எப்போதுமே சகோதரர்களாகவே இருந்து வருகிறோம்.. இந்த முறை வெளியிலிருந்து சிலர் எங்களுக்குள் பிரிவினையை தூண்டி விட்டு, அதனாலேயே இந்த தேர்தலில் கடும் போட்டி என்கிற அளவிற்கு வந்து விட்டது.. என்னை பொருத்தவரை மாலை 6 மணி வரை தான் இமயம் அணி, புது வசந்தம் அணி என இரண்டு அணிகள்.. தேர்தல் முடிந்ததும் நாங்கள் எப்போதுமே இயக்குனர் சங்கம் என்கிற ஒரே அணிதான்.. யாரையும் நாங்கள் எதிரணியினர் ஆக பார்ப்பது இல்லை” என்று கூறினார்.