விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி. அதைத்தொடர்ந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர் என தொடர்ந்து விஜய்சேதுபதி படங்களில் தவறாமல் இடம் பெற்று வந்தார் காயத்ரி.
தற்போது பிரபுதேவா நடிக்கும் பஹீரா டைட்டானிக் காதலும் கவுந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது முதல்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் காயத்ரி.
குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கும் நின்ன தான் கேஸ் கொடு படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் காயத்ரி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படம் தான் தற்போது தமிழில் கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் கூகுள் குட்டப்பன் என்கிற பெயரில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.