V4UMEDIA
HomeReviewவலிமை – விமர்சனம்

வலிமை – விமர்சனம்

ஆப் மூலம் அட்ராசிட்டி பண்ணும் பைக் கொள்ளையர்களுக்கு ஆப்பு வைக்கும் போலீஸ் அதிகாரி.. இதுதான் வலிமை படத்தின் ஒன்லைன்

அண்ணன், தம்பி, அம்மா என்கிற கூட்டுக்குடும்பத்தில் அஜித் போலீஸ் அதிகாரி. அண்ணன் குடிகாரன்.. தம்பி வேலையில்லா பட்டதாரி.. சின்னதாக ஒரு தற்கொலை வழக்கில் ஆரம்பிக்கும் அஜித்தின் விசாரணை, போதை மருந்து கடத்தல், செயின் கொள்ளைகளை நிகழ்த்தும் பைக்கர்ஸ் என புது ரூட்டில் பயணித்து வேலையில்லாத இளைஞர்களை எல்லாம் மூளைச்சலவை செய்து ஆப் மூலமாக அவர்களை இயக்கும் மெயின் வில்லன் கார்த்திகேயாவிடம் கொண்டுபோய் நிறுத்துகிறது.. பரபர பைக் சேசிங்கிற்கு பிறகு கார்த்திகேயாவை பிடிக்கிறார் அஜித்.. ஆனால் விசாரணையில், நாம் எதிர்பார்த்த புது ட்விஸ்ட்டாக, எனக்கு தலைவன் ஒருவன் இருக்கிறான் என கார்த்திகேயா கைகாட்டும் ஆள் யார் தெரியுமா..? சாட்சாத் அஜித்தின் வேலையில்லா தம்பியே தான்.

இவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஒப்படைக்க கொண்டு செல்கிறார் அஜித். கடுமையான பாதுகாவலையும் மீறி அஜித்தை தாக்கி அவரிடம் .இருந்து கார்த்திகேயாவை காப்பற்றி தானும் தப்பிக்கிறார் தம்பி. இதனால் அஜித்தை பதவி இறக்கம் செய்துவிட்டு, கேஸ் வேறு அதிகாரியின் கைகளுக்கு போகிறது. தனது இளையமகன் இப்படி கொள்ளைகாரனாக மாறிவிட்டானே என்கிற வருத்தத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் அம்மா சுமித்ரா.

தம்பியை உயிருடன் கொண்டுவந்து நிறுத்துவதாக கூறி மீண்டும் தேடலை ஆரம்பிக்கிறார் அஜித். போலீஸிடம் சிக்கிய தனது போதைப்பொருள் சரக்கை அஜித்தை வைத்தே கைப்பற்ற, அம்மா சுமித்ராவையும் குடும்பத்தையும் கடத்தி வந்து அவர்களை பகடை காயாக பயன்படுத்துகிறார் கார்த்திகேயா. ஆனால் அஜித்திற்கு எதிரான அதிகாரிகள் இதற்கு குறுக்கே நிற்கிறார்கள். தடைகளை உடைத்து எதிரியின் குகைக்குள் நுழைந்து தாயையும் தம்பியையும் அஜித் காப்பாற்றினாரா என்பது க்ளைமாக்ஸ்.

நரைத்த தலை, தாடி எல்லாவற்றையும் ரசிகர்களுக்காக தியாகம் செய்து படு யூத்தாக காட்சி தருகிறார் அஜித். பிரிக்க முடியாதது அஜித்தும் பைக் ரேஸும் என்பதற்கேற்ப தனது ரசிகர்களுக்கு இந்த படத்தில் புல் ட்ரீட் கொடுத்திருக்கிறார் அஜித். வில்லன்களை பைக்கில் துரத்தும் அந்த சாகச காட்சிகளில் ஹாலிவுட் ஹீரோக்களுக்கே பாடம் எடுத்துள்ளார் அஜித். அதேபோல வில்லனை கோர்ட்டில் ஒப்படைக்க செல்லும் அந்த பத்து நிமிட சேசிங் காட்சியில் நம்மை இருக்கை நுனிக்கே வரவைத்து விடுகிறார் அஜித்.

அஜித்தின் தோழியாக ஹூமா குரேஷி.. நல்லவேளையாக காதல், டூயட் என இல்லாமல் கடமைக்காக (கடமையை செய்வதற்காக) கதாநாயகனுடன் கைகோர்த்து கூடவே சாகசமும் செய்திருக்கிறார். படத்திற்கு வலிமை சேர்க்கும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. கதைக்கு பொருத்தமான தேர்வு.. இறுதிவரை அஜித்துக்கு அவர் டப் கொடுப்பதால் நம்பகத்தன்மையுடன் நம்மால் படத்துடன் ஒன்ற முடிகிறது.

சென்டிமென்ட் ஏரியாவை அம்மாவாக வரும் சுமித்ரா, தம்பி ராஜ் ஐயப்பா ஆகியோர் கவனித்துக்கொள்கின்றனர். இஞ்சினிரிங் படித்தால் இதுதான் கதியா என்பதுபோல பல மாணவர்கள் அஜித்தின் தம்பி ராஜ் அய்யாப்பாவின் கதாபாத்திரத்தை பார்த்து பயப்பட வாய்ப்பு உண்டு. போலீஸில் எப்போதுமே இருக்கும் சில கருப்பு ஆடுகளாக சார்பட்டா புகழ் ஜி.எம்.சுந்தர் மற்றும் அவருக்கு உதவியாக மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர் இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

படத்தில் பிரமிப்பூட்டுவை சண்டைக்காட்சிகளும் அவற்றை படமாக்கிய விதமும் தான்.. அந்தவகையில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவையும், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். யுவனின் பின்னணி இசையும் விறுவிறுப்பை கூட்ட உதவி இருக்கிறது.

ஹெச்.வினோத்தின் படங்களுக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாகி இருக்கிறது. அதிலும் அஜித் படம் என்பதால் அவருக்கு கூடுதல் பொறுப்பும் வேறு.. ஆனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினருக்குமான படமாக இதை உருவாக்கி இருக்கிறார். டெக்னாலஜியின் உதவியால் அஜித் வில்லனை நெருங்கும் விதத்தை த்ரில்லிங்காக நகர்த்தி சென்றுள்ளார்.

அதேசமயம் வேலையில்லாத இளைஞன் என்றால் திருடத்தான் போவான், அதற்கு இந்த சமூகமும் குடும்பமும் தான் காரணம் என்கிற பழைய மாவிலேயே ஹெச்.வினோத்தும் தோசை சுட்டிருக்க தேவையில்லை..

முப்பது வருடத்துக்கு முன்பு வால்டர் வெற்றிவேல் என்கிற படம் ஒன்று வந்தது.. ஐந்து வருடங்களுக்கு முன் மெட்ரோ என்கிற ஒரு படம் வெளியானது. இந்த இரண்டு படங்களின் கதையையும் ஒன்றாக்கி டெக்னாலஜி என்கிற டெக்கரேஷன் மூலம் வித்தியாசப்படுத்தி வலிமையான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத்.  

Most Popular

Recent Comments