விஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வலிமை திரைப்படம் இன்று உலகெங்கிலும் ரிலீசாகியுள்ளது. ஒரு வார காலத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்துமே விற்று தீர்ந்து விட்டன என தியேட்டர்கள் வட்டாரத்திலிருந்து பிரமிப்புடன் பேசப்பட்டு வருகிறது..
ரசிகர்கள் அதிகாலை முதல்நாள் முதல் காட்சிக்காக தியேட்டர்களில் கட்டவுட், பேனர் என அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். அதேபோல ஒவ்வொரு படத்தில் நடித்த நட்சத்திரங்களும் கூட தங்களது படத்தின் முதல்நாள் முதல் காட்சியை ரசிகர்களின் ஆரவாரத்துடன் தியேட்டரில் அமர்ந்து பார்ப்பது வழக்கமான ஒன்றுதான்.
அந்த வகையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், வில்லன் கார்த்திகேயா ஆகியோருடன் படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் இந்த படத்தை ரசிகர்களுடன் ரசிகராக அமர்ந்து பார்த்து ரசித்தார். படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த் ஆரவார வரவேற்பை பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார்..