காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கியவர் மணிகண்டன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் விவசாயிகளின் உண்மையான பிரச்சனையையும் அவர்களது வலி மிகுந்த வாழ்க்கையையையும் மிக இயல்பாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது.. இந்த படத்தில் இடம்பெற்ற நல்லாண்டி என்கிற விவசாயி கதாபாத்திரம் நிஜமாகவே வாழ்ந்த ஒருவரை மையப்படுத்திதான் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகளின் பாராட்டுகளையும் பெற்றது.
இந்தநிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் மிஸ்கின் ரொம்பவே பரவசப்பட்டு போய், உடனடியாக இயக்குனர் மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்று அவரது வீட்டில் மணிகண்டனை கட்டித்தழுவி மாலை அணிவித்து மரியாதை செய்து உள்ளார்.
அதுமட்டுமல்ல நிஜமாகவே வாழ்ந்த அந்த பெரியவர் நல்லாண்டியின் வீட்டிற்கும் சென்று அவருக்கும் தனது அஞ்சலியை செலுத்தினார் மிஸ்கின். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதிக்கு சென்று அங்கு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு அதன் பிறகு தான் அங்கிருந்து கிளம்பினார் இயக்குனர் மிஸ்கின். இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மகத்தான நாளாக அமைந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.