மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ஜோசப். தற்போது குணச்சித்திர நடிகராக பிசியாக நடித்து வரும் ஜோஜூ ஜார்ஜ் என்பவர் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். பிரபல இயக்குனர் பத்மகுமார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் அங்கே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட இந்த படத்திற்கான ரீமேக் ரைட்ஸ் பரபரவென விற்று தீர்ந்தது. அந்த வகையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருந்தார் இயக்குனர் பாலா.
தற்போது தனது பி ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்க இந்த படத்தை தயாரித்துள்ள பாலா, மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் பத்மகுமாரே தமிழிலும் இயக்கட்டும் என முடிவு செய்தார். இப்போது படம் முடிந்து திரைக்கு வர தயாராகி உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவை நடத்தியுள்ளனர்.
இந்த விழாவில் இயக்குனர் பாலா பேசும்போது, “இந்த படம் ஆரம்பித்த சமயத்திலேயே இயக்குனர் பத்மகுமாரிடம் நீங்கள் அங்கே செய்ய முடியாததை பணம் பற்றிய கவலை இல்லாமல் இங்கே பண்ணுங்கள் என கூறிவிட்டேன். அவரும் மலையாள படத்தை விட இந்த படத்தை அழகாக எடுத்துள்ளார். இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் அதை அவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. படம் நன்றாக உள்ளது” என்று பேசினார். அதேபோல இயக்குனர் பத்மகுமார் பேசும்போது, “ஒரு காலத்தில் சென்னையில் உதவி இயக்குனர் வாய்ப்புக்காக அலைந்தேன்.. அந்த சமயத்தில் இங்கே இப்படி ஒரு விழாவில் நான் மேடை ஏறுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை.. அதற்கு இயக்குனர் பாலா மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ் இருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறினார்