நாடாளும் அரசியலில் எந்த அளவுக்கு பரபரப்பு இருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாத பரபரப்பை திரையுலக சங்கங்களின் தேர்தல்களிலும் காணமுடியும்.. பொதுவாக நடிகர் சங்க தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் தான் மிகப்பெரிய போட்டியும், ஒருவர் மீது ஒருவர் சரமாரி குற்றச்சாட்டு வைப்பதையும் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் பெரும்பாலும் அமைதியாகவே நடக்கும் இயக்குனர் சங்க தேர்தல் கூட, இந்த முறை கனத்தை சூடாக்கி உள்ளது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் ஒரு பக்கம் ஆர்கே செல்வமணி தலைமைப் பதவிக்கு போட்டியிட, இன்னொரு பக்கம் முதல்முறையாக இயக்குனர் கே.பாக்யராஜ் தனது அணியுடன் களமிறங்கியுள்ளார்.
இதுவரை எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக செயல்பட்டு வந்த இயக்குனர் பாக்யராஜ் இப்போது திடீரென இயக்குனர் சங்கத்திற்கு தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்றால் ஏதோ விஷயம் இருக்கத்தான் செய்கிறது என பலரும் நினைத்தார்கள்.. அது உண்மைதான் என நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது போட்டு உடைத்தார் பாக்யராஜ்.
அதாவது விஜய்யின் சர்க்கார் படம் வெளியானபோது கதை திருட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. ராஜேந்திரன் என்பவர் அது தன்னுடைய கதை என எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அப்போது தலைவராக இருந்த பாக்யராஜ் அதை விசாரித்து அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று கூறி அவருக்கு இழப்பீடாக குறிப்பிட்ட தொகை கிடைக்கவும் படத்தில் அவரது பெயரும் இடம் பெறுமாறு ஏற்பாடு செய்தார்.
ஆனால் அந்த சமயத்தில் இயக்குனர் சங்க தலைவராக இருந்த ஆர்கே செல்வமணி இந்த விஷயத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டார் என்று தற்போது கூறியுள்ள பாக்யராஜ் இதில் அவர் போர்ஜரி செய்து விட்டார் என்கிற கடினமான வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார்.
இயக்குனர் சங்கத்தில் தலைவராக இருக்கும்போதே வேறு ஒரு சங்கத்தில் உள்ளே நுழைந்து அதில் அதிகாரம் செலுத்த முடியும் என்றால், தான் தலைமை பொறுப்பு வகிக்கும் சங்கத்தில் எவ்வளவு விஷயங்களை எதேச்சதிகாரத்தோடு அவரால் செய்திருக்க முடியும் அதனால் தான் இயக்குனர்களுக்கும் உதவி இயக்குநர்களுக்கும் நல்லது நடந்திட, இந்தமுறை தான் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலைமை வந்தது என கூறியுள்ளார் இயக்குனர் பாக்யராஜ்.