தமிழ் சினிமாவில் பெரும்பாலும் டைட்டில் பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக ஒரு படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அந்தப் படத்தின் டைட்டில் குறித்து நீதிமன்றம் வரை சென்று போராட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது
ஏற்கனவே சசிகுமார் நடித்த காமன்மேன் படம் டைட்டில் பிரச்சனையில் சிக்கித் தவித்துவரும் நிலையில், தற்போது கள்ளன் என்கிற படம் அதேபோன்ற டைட்டில் விவகாரத்தில் சிக்கியுள்ளது. இந்த படத்தை பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.
இயக்குனர் கரு.பழனியப்பன், நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா, மாயா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..
ஆனால், இந்தப்படத்தின் டைட்டிலுக்கு வேறு எந்த படமும் உரிமை கொண்டாடவில்லை. இதன் பிரச்சனையே வேறு.. கள்ளன் என்பது தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை குறிப்பதாகவும் அதனால் இந்த படத்திற்கு டைட்டில் வைக்கக்கூடாது என ஒரு சிலர் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி உள்ளனர்
குறிப்பாக பெண் ஒருவர் இந்த படத்திற்கு கள்ளன் டைட்டிலை வைக்க அனுமதிக்கக்கூடாது என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். ஆனால் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியதுடன், இந்த படத்தின் கதைக்கான பொருத்தமான டைட்டிலை தான் வைத்துள்ளார்கள் என்றும் கூறிவிட்டார்கள்.
இதை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குறிப்பிட்ட அந்த பெண் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு, இந்த டைட்டிலை பயன்படுத்த தடை இல்லை என்றும் அறிவித்து விட்டார்.