லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவாகி வரும் படம் விக்ரம். கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவங்கப்பட்டு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலேயே இதற்கான டீசரையும் கமல் ரிலீஸ் செய்தார். ஆனால் ஒரு பக்கம் கொரோனா தாக்கம் இன்னொரு பக்கம் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவற்றால் ஏற்பட்ட சுகவீனம் என விக்ரம் படத்தின் படப்பிடிப்பிற்கு பலவிதமான தடைகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தை உரிய நேரத்தில் முடிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் தற்போது கமலுக்கு ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன் களையும் தொகுத்து வழங்கிய கமல் தற்போது ஓடிடி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வாரம் ஒருநாள் தான் என்றாலும் இந்த நிகழ்ச்சியால் மேலும் விக்ரம் படம் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதாக கூறியுள்ள கமல் இந்த நிகழ்ச்சியிலிருந்து தற்போது தற்காலிகமாக வெளியேறுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் என்னையும் எப்போதும் பிரிக்க முடியாது. அதிலும் குறிப்பாக இப்போது ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முதல் ஆளாக வரவேற்றவர் நான். அதனால் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தேன். ஆனால் தற்போது இதன் காரணமாக விக்ரம் படத்தின் படப்பிடிப்பு குறிப்பாக என்னுடன் இணைந்து பணியாற்றும் மற்ற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் தேதிகளுக்கு இடையூறு ஏற்படும் விதமாக இருப்பதால், இன்று ஒளிபரப்பாகும் எபிசோடுக்கு பிறகு இந்த தொடரில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இது தற்காலிகம் தான் அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.